Showing posts with label Dindigul. Show all posts
Showing posts with label Dindigul. Show all posts

Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பூஞ்சோலையில் உள்ள அமரர் சஞ்சய்காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நெசவாளர்களுககு செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பசுமை வீடுகள் கட்டப்படுவது குறித்து மாநில கைத்தறி நெசவாளர் சங்க பொதுச்செயலாளர் பூவைச்சந்திரன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
ஏழை, எளிய நெசவாளர்களின் நலன் கருதி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கிராம புறங்களில் கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், நெசவாளர் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும் மானியமாக கொடுத்து வருகிறார். நெசவாளர்களுக்கு கட்டப்படும் பசுமை வீடுகளின் உள்ளே நெசவு தறிக்கூடம் அமைப்பதற்காக மேற்கூரை 12 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கு குறைவாக கட்டினால் நெசவு நெய்ய பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும். தற்போது சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் 15 வீடுகளும் உயரம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் பாண்டியராஜனிடம் கேட்ட போது, ‘நெசவாளர்களுக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளின் மேற்கூரை 12 அடி உயரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த வீட்டிற்கு அரசு வழங்கும் நிதி உதவி நிறுத்தப்படும். இந்த கட்டிட பணி குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்றார்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
சேமநல நிதி வட்டி தொகையை வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக சேமநல நிதி வட்டித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல், பணியின்போது இறந்த தொழிலாளர்களுக்கும் பண பலன்கள் வழங்கப்படவில்லை.

நிலுவையில் உள்ள சேமநல நிதி வட்டி தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

நிலுவையில் உள்ள சேமநலநிதி வட்டி தொகை மற்றும், இறந்தவர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையாளர் ராஜன் விரைந்துவந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், போராட்டக்காரர்கள் ஆணையாளரின் அறை கதவை தட்டி கோஷங் கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய அவர்களது போராட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.

ரூ.1 கோடியே 17 லட்சம் நிலுவை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜனிடம் கேட்டபோது, ‘சுமார் 1,600 துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேம நல நிதி வட்டி தொகை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கான முழு நிதி இன்னும் வரவில்லை. 1990-2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய நிதி சுமார் சுமார் ரூ.1 கோடியே 17 லட்சம் வந்து உள்ளது. அந்த தொகையை அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக பிரித்து வழங்க இருக்கிறோம். 2001-ம் ஆண்டில் இருந்து கொடுக்க வேண்டிய தொகைக்கான நிதி வந்ததும், பின்னர் கொடுக்கப்படும்’ என்றார். 

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தரமான உணவு வழங்கக் கோரி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி விடுதி

பழனி-திண்டுக்கல் ரோட் டில் அமைந்துள்ள பழனி யாண்டவர் பாலிடெ க்னிக் கல்லூரி மாணவர்களில் 243 மாணவர்கள் கல்லூரி வளாகத் தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர் களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் அடிப் படை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதிகள் யாவையும் முழுமையாக தங்களால் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது என விடுதி மாணவர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குளியலறை உள்ளிட்டவைகள் சுகாதார மற்ற நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.

தரமற்ற உணவு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதியில் வழங் கப்படும் உணவுகள் தரமற்ற தாக இருப்பதோடு உணவில் புழுக்களும் இருப்பதாக விடுதி மாணவர்கள் கல்லூரி அலு வலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் விடுதி மாண வர்கள் அனைவரும் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.

முதல்வர் சமரசம்

சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விடுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவு தர மற்றதாக உள்ளது. மேலும் விடுதி அறைகளில் வசிக்கும் மாணவர்கள் ஒவ் வொருவரிட மும் மின் கட்டணமாக ரூ. 124-ம், உணவு கட்டணமாக ரூ. 1,850-ம் வசூலிக்கின்றனர் ஆனால் அதற்கான ரசீது வழங்குவதில்லை, கடந்த சில நாட்களாக விடுதி அறையில் இருக்கும் மடிக்கணினிகள் திருடு போகும் சம்பவம் நடக் கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துபேசிய கல்லூரி முதல்வர்கந்தசாமி மாணவர்களின் அனைத்து புகார்கள் குறித்த விசாரணை யை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மேலும் அனைத்து பிரச்சினை களை யும் தீர்க்க உடனடி நட வடிக்கையும் எடுக்கப்படும் என்றார். இதையடுத்துபோ ராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் கலைந்து சென்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
நிலக்கோட்டை, 
மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை குறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வண்டியூர் அருகே உள்ள தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 23), வேலுபாண்டி (24), செல்லபாண்டி (23), மாந்தோப்பு விஜய் (23) ஆகிய 4 பேரும் சரண் அடைந்தனர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு நாகலட்சுமிதேவி உத்தரவிட்டார்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திண்டுக்கல்,
உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடும் பஸ்சில் அறிமுகமாகி, கைவரிசை காட்டிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் அறிமுகம்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கோம்பை அருகே உள்ள சின்னழகநாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 54). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதற்காக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் தனது மகளுடன் அந்த ஆஸ்பத்திரிக்கு ராஜலட்சுமி சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சையை முடித்து விட்டு வேடசந்தூர் நோக்கி சென்ற ஒரு பஸ்சில் 2 பேரும் பயணம் செய்தனர்.
அப்போது அவர்களது இருக்கையின் பின்புறத்தில் உள்ள இருக்கையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அந்த நபர், ராஜலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். ராஜலட்சுமியின் ஊர், முகவரி மற்றும் குடும்ப பின்னணி பற்றி கேட்டறிந்தார். தனது பெயர் மோகன் என்றும், தனது தந்தை ஒட்டன்சத்திரத்தில் போலீஸ்காரராக வேலை செய்வதாகவும் கூறி தன்னை அறிமுகப்படுத்தினார்.
முதியோர் உதவித்தொகை
தனக்கு தெரிந்த அதிகாரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர் என்றும், அவர்கள் மூலம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாகவும் ராஜலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறினார். மேலும ராஜலட்சுமி கொடுத்த முகவரிப்படி அவரது வீட்டுக்கு அந்த நபர் சென்றார்.
மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு ராஜலட்சுமியை நேற்று வரச்சொன்னார்.
அதன்படி சின்னழகநாயக்கனூரில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு ராஜலட்சுமி பஸ்சில் வந்தார். ராஜலட்சுமியை எதிர்பார்த்து, திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அந்த நபர் காத்திருந்தார். ராஜலட்சுமி வந்தவுடன், அவரை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பஸ்சில் அவர் அழைத்து சென்றார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் ராஜலட்சுமியை அவர் உட்கார வைத்தார். பின்னர் ராஜலட்சுமியிடம் அந்த நபர், சங்கிலி மற்றும் கம்மல் அணிந்தபடி அதிகாரியை சந்தித்தால் வசதி படைத்தவர்கள் என்று கூறி உதவித்தொகை வழங்க மாட்டார் என்றும், கம்மல், சங்கிலி ஆகியவற்றை கழற்றும்படி சொன்னார்.
கம்மல், செல்போன் பறிப்பு
இதை உண்மையென நம்பிய ராஜலட்சுமியும் தான் அணிந்திருந்த சங்கிலி மற்றும் கம்மலை கழற்றினார். பின்னர் அவைகளை தான் வைத்திருந்த பணப்பையில் வைத்திருந்தார். அந்த பைக்குள் ஒரு செல்போன் மற்றும் ரூ.500 ஏற்கனவே இருந்தது. பணப்பையை தன்னிடம் தருமாறு அந்த வாலிபர் கேட்டார்.
அப்போது, தான் வைத்து கொள்வதாக ராஜலட்சுமி கூறினார். அதற்கு அந்த நபர், பையுடன் உள்ளே சென்றால் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தியுள்ள கருவி மூலம் தங்க பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து, முதியோர் உதவித்தொகை தர மாட்டார்கள் என்று கூறி பணப்பையை வாங்கி கொண்டார்.
பின்னர் ராஜலட்சுமியை மரத்தடியில் உட்கார்ந்து இருக்குமாறு கூறி சென்ற அந்த நபர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பணப்பையுடன் அவர் மாயமாகி விட்டார். அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை ராஜலட்சுமி உணர்ந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜலட்சுமி அணிந்திருந்த கம்மல் மட்டும் ½ பவுன் மதிப்புள்ள தங்க நகை என்றும், அந்த சங்கிலி ‘கவரிங்‘ என்றும் தெரியவந்தது.
இதற்கிடையே மூதாட்டியை ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
வத்தலக்குண்டு அருகே ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரேசன் கடையில் தகராறு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

சிறைபிடிப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
வடமதுரை அருகே மூதாட்டியை கொலை செய்து பணம், நகையை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி கொலை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். (வயது 54). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எலிசபெத் ராணி (50). இவர் முள்ளிப்பாடியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லியோ பிரான்சிஸ் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று எலிசபெத் ராணி வேலைக்கு சென்று விட்டார். மதியம் ஆரோக்கியதாஸ் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று இருந்தார். வீட்டில் ஆரோக்கியதாசின் தாயார் அந்தோணியம்மாள் (75) என்பவர் மட்டும் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ஆரோக்கியதாசின் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு வீட்டில் இருந்த அந்தோணியம்மாளை அவர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நகை, பணம் கொள்ளை

பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் 6½ பவுன் தங்க நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் வீடு திரும்பிய ஆரோக்கியதாஸ் வீட்டிற்குள் தாயார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவழகன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ஆகியோர் விரைந்து வந்தனர்.

மோப்ப நாய் சோதனை

பின்னர் கைரேகை நிபுணர் வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் செட்டியப்பட்டி பிரிவு வரை மோப்ப நாய் ஓடி நின்றது. ஆனால் யாரையும் மோப்ப நாய் கவ்வி பிடிக்கவில்லை.

அந்தோணியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதர் அந்தோணியம்மாளிடம் பேசிக்கொண்டு இருந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர் கூறிய அடையாளத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
வத்தலக்குண்டுவில் ஆசைக்கு இணங்க மறுத்த கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கருத்து வேறுபாடு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் மாலதி. இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி என்ற மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.

மாலதி வத்தலக்குண்டுவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டுக்கு அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 38) என்பவர் வாடகை வீட்டில் குடியிருக்க வந்தார். இவரும் திருமணம் ஆகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டபிரபு வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

மீண்டும் திருமணம்

இந்த நிலையில் மாலதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியனிடம், மணிகண்டபிரபு கேட்டுக் கொண்டார். இதையொட்டி மணிகண்டபிரபுவுக்கும், மாலதிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் இரண்டுபேரும் பாண்டியன் வீடு அருகிலேயே குடியிருந்து வந்தனர். தற்போது மாலதி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மாலதி ஆன்மீகத்தில¢ அதிக ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வந்தார்.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாலதியை ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டபிரபு வற்புறுத்தி உள்ளார். மாலதி கோவிலுக்கு விரதம் இருந்து வந்ததாலும், அருகில் 11 வயது மகள் நந்தினி தூங்கிக் கொண்டு இருந்ததாலும் அவர் கணவரின் அழைப்பை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு வீட்டில் இருந்த போர்வையால் மாலதி முகத்தை மூடி மூச்சு த்திணற வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் பாண்டியன் தனது மகளை பார்ப்பதற்காக மாலதி வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டியன் பக்கத்து வீட்டுக் காரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாலதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது மகள் நந்தினி அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பரபரப்பு

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி, சப்-இன்ஸ¢பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டபிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் 11–வது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததையடுத்து, அவருடைய 10 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை தாயில்லா குறை தெரியாமல் வளர்க்கப்போவதாக அவர்களுடைய தாத்தா கூறி உள்ளார்.

பிரசவத்தின்போது பெண் சாவு 


திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 66). இவர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 60). இவர்களுக்கு மணிகண்டன் (40) என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர்.

இதில் மணிகண்டனுக்கு சீலப்பாடியில் உள்ள உறவினர்கள் வழியில் சித்ரா (வயது 35) என்ற பெண்ணை கடந்த 1998–ம் ஆண்டு சுப்பன் திருமணம் செய்துவைத்தார். மணிகண்டனுக்கும், சித்ராவிற்கும் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த நிலையில், 11–வது முறையாக கர்ப்பமான சித்ரா, பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக இறந்தார்.

10 குழந்தைகளை பெற்றெடுத்த சித்ராவின் இறப்பு பற்றி அவருடைய மாமனார் சுப்பன் கூறியதாவது:–

10 குழந்தைகள் 


மணிகண்டன், சித்ரா தம்பதிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முத்தமிழ் முதல்வன் என்று பெயர் வைத்தோம். அவனுக்கு 15 வயது ஆகிறது. 10–ம் வகுப்பு அரசு தேர்வில் தோல்வியடைந்த அவன் மீண்டும் தேர்வு எழுத படித்துக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்து மகாலட்சுமி (14) திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.

அதற்கு அடுத்ததாக பிறந்த சத்தியாலட்சுமி (13) 9–ம் வகுப்பும், யோகேஸ்வரி (12) 7–ம் வகுப்பும், யோகேஸ்வரன் (10) 5–ம் வகுப்பும், பிரபாகரன் (9) 4–ம் வகுப்பும், கொடியரசி (7) 2–ம் வகுப்பும், சீதா (4) தோட்டனூத்தில் உள்ள பால்வாடியிலும் படித்து வருகின்றனர். சீதாவிற்கு அடுத்ததாக குபேரன் (2), மாரீஸ்வரி (வயது 1) என 10 குழந்தைகள் உள்ளனர்.

குளிர்பானம் 


இந்த நிலையில், சித்ரா 11–வது முறையாக கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென ஒரு நாள் சித்ராவிற்கு வயிற்று வலி வந்தது. கடையில் குளிர்பானம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். வாங்கி கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் வலி நின்று விட்டது என்றார். அதற்கு பின்பு 2 முறை வயிற்று வலி வந்து இருக்கிறது. அப்போதும் எனது மனைவி மூலம் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு சித்ரா சமாளித்து இருக்கிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தோம். ஆஸ்பத்திரியில் அவருக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

சித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டது. ஆனால் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து கொள்ளாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது.

குழந்தைகள் தவிப்பு 


அவரை இழந்து 10 குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

சித்ரா தனது குழந்தைகளை அளவு கடந்த பாசத்துடன் வளர்த்தார். அதைப்போலவே நானும் அவரது குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகிறேன். விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. நான் அரசு வேலை பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இப்போது வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறேன். எனது மகன் கூலி வேலைதான் செய்து வருகிறார். அவர் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை கொண்டும், எனது வருமானத்தை வைத்தும் 10 குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஆனந்தபாபு (வயது24). இவர் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையை அதே பகுதியை சேர்ந்த ராகவன், ரெங்கராஜன் ஆகியோர் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தபாபு 2 பேரையும் கண்டித்தார். இதில் 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
On Saturday, September 13, 2014 by farook press in ,    
தண்ணீர் தொட்டியில் மூழ்கி, 1½ வயது குழந்தை பலியான சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் மூழ்கி பலி

திண்டுக்கல் அய்யன்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி செல்வி (38). இவர்களுக்கு பிரியங்கா (7), தானியா (4), சிவராமன் (1½) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். இதில், குழந்தை சிவராமன் நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தான்.

வீட்டின் முன்பு தரையில் சுமார் 9 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து மாடிக்கு தண்ணீர் ஏற்றினர். இதனால் தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி திறந்திருந்தது. இதை அறியாத சிவராமன், தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டான். சிறிது நேரத்தில், தண்ணீரில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான்.

கதறி அழுத உறவினர்கள்

இதற்கிடையே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணாததை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சில நாட்களாக அந்த தண்ணீர் தொட்டியில் 2 அடி தான் தண்ணீர் இருந்திருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் தான் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து தொட்டியை நிரப்பி இருக்கின்றனர். அந்த தண்ணீர் தான், சிறுவனின் உயிரை குடித்திருக்கிறது. இதேபோல் திண்டுக்கல்லில் வேறு இடத்தில் வசித்து வந்த ஆறுமுகம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் தனது குடும்பத்தினருடன் அந்த வீட்டுக்கு வாடகைக்கு குடிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மூழ்கி பலியான சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பழனி ஆட்டோ டிரைவர்களான உதயகுமார் (வயது 36), பாலாஜி (26) ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பூபாலன், செந்தில்பாண்டி ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரட்டை கொலை வழக்கில் மேலும் 7 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தலைமறைவாக இருக்கும் 7 பேரை பிடிக்க தீவீர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பழனி வையாபுரி குளம் 5 கண் பாலம் அருகே பதுங்கி இருந்த அய்யாவு (29), ரியாஸ்தீன் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், பெரியாவுடையார் கோவில் அருகே நடந்த ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஏற்கனவே அய்யாவு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பழனி இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பழனி அடிவாரம் தபால் நிலைய ரோடு பகுதியை சேர்ந்த துர்க்கைராஜ் (வயது 30) திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அப்போது அவருடைய தாடை, காது பகுதிகளில் வெட்டு காயம் இருந்தது.

இதை கண்ட நீதிபதி, துர்க்கைராஜை செசன்சு கோர்ட்டு போலீசாரிடம் ஒப்படைத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து துர்க்கைராஜை திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் 45 கொலைகள் நடந்துள்ளதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
திண்டுக்கல் என்றால், பூட்டு, பிரியாணி என்ற நிலைமாறி தற்போது கொலை, கொள்ளைக்கு பெயர்பெற்ற நகரமாகி விட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளன.
ஜனவரி மாதத்தில் 2 பேர், பிப்ரவரியில் 5 பேர், மார்ச்- 5 பேர், ஏப்ரல்- 6 பேர், மே மாதம் 7 பேர், ஜூன் -6 பேர், ஜூலை- 6 பேர், ஆகஸ்ட் - 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பழநியில் பொதுமக்கள் முன்னிலையில் 2 பேரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு சாவகாசமாக தப்பியது. மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது, பழநியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., எஸ்.பி., மற்றும் 700 போலீஸார் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்புக்காக முகாமிட்டிருந்தனர். இந்த நேரத்திலேயே இரட்டைக் கொலை நடந்ததால், உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பழநியில் ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் பெண் பள்ளித் தாளாளர் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றொருவர் மறுநாள், தனியார் தோட்டத்தில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
கடந்த மாதம் திண்டுக்கல் சிறைச்சாலையின் பின்புறம் ரவுடி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் ஆஜராக வந்த தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் மீது, போலீஸார் கண் எதிரிலேயே காரில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியது. இதில் நூலிழையில் பண்ணையார் ஆட்கள் உயிர் தப்பினர்.
கடந்த ஆண்டு, நீதிமன்ற வாயிலில் இதே வழக்கில் ஆஜராக வந்த பண்ணையார் ஆதரவாளர் முத்துபாண்டி என்பவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் தப்பிய அவர், மதுரையில் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுபோல கொலை, கொள்ளைச் சம்பவங்களும், வெடிகுண்டு கலாச்சாரமும் திண்டுக்கல் நகரில் அதிகரித்து வருகிறது.
நகர், கிராமப்புறங்களில் நடக்கும் அடிதடி சாதாரண தகராறு, முன்விரோதம் உள்ளிட்ட பிரச்சினைகளில் போலீஸார் முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதனால், சாதாரண பிரச்சினைகள் கூட, பெரிதாக வளர்ந்து தொடர் கொலைகள் நடப்பதால் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியது ‘‘பழநி இரட்டைக் கொலையில் 2 பேரைப் பிடித்துள்ளோம். இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறுதான், இந்தக் கொலைக்குக் காரணம். இதுபோன்ற சிறுசிறு பிரச்சினைகளில் ஏற்படும் கொலைகளைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழக சித்த மருத்துவத் துறை ஆணையர் அபூர்வா ஆலோசனையின்பேரில், பொதுமக்கள் அனைவரின் உடல் நலம் காக்க, வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு வகையான சூப் வழங்கும் துவக்க விழா, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.
பழனியில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மரு. புகழேந்தி, பங்கேற்றார். முன்னதாக இவர், சித்த மருத்துவப் பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: இந்த சூப் வழங்கும் திட்டம், பொதுமக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழவும், நோய் வரும் முன் தடுக்கும் பொருட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், சூப்பினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து, வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இன்று முதன்முதலாக பொன்னாங்கண்ணி சூப் வழங்கப்படுகிறது. இது, உடலை சுத்தப்படுத்தும். கல்லீரல் நோய்க்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.
திண்டுக்கல் மாவட்டத்திலேயே பழனி சித்தா மருத்துவப் பிரிவில் சிகிச்சைக்காக தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், நோயாளிகள் சித்த மருத்துவத்தின் மூலம் அதிகம் பயனடைகின்றனர் என்பது தெரியவருகிறது.
எனவே, அதற்கேற்ப மருந்துகள் கூடுதலாக வழங்க உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர், விழாவில் பழனி சித்த மருத்துவ அதிகாரி மகேந்திரன் பேசினார்.
நிகழ்ச்சியில், பழனி அரசு மருத்துவ அதிகாரி இளங்கோவன் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மருத்துவப் பணியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
இதில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, வரிசையில் காத்திருந்து பொன்னாங்கண்ணி சூப்பை பருகி பாராட்டிச் சென்றனர்.